Tuesday, 21 July 2015

காவிரிப் பூம்பட்டினம்

காவிரிப் பூம்பட்டினத்து இரவு நேர நிகழ்வுகள்

துணைப் புணர்ந்த மட மங்கையர்
பட்டு நீக்கித் துகில் உடுத்தும்
மட்டு நீக்கி மது மகிழ்ந்தும்
மைந்தர் கண்ணி மகளிர் சூடவும்
மகளிர் கோதை மைந்தர் மலையவும்
நெடுங்கால் மாடத்து ஒள் எரி நோக்கிக்
கொடுந்திமில் பரதவர் குருஉச்சுடர் எண்ணவும்
பாடல் ஓர்ந்தும் நாடகம் நயந்தும்
வெண் நிலவின் பயன் துய்த்தும்
கண் அடைஇய கடைக் கங்குலான் (106- 115)

The Night Events

Delicate women who unite with their
husbands wear cotton instead of silk and
drink wine instead of toddy.

Men wear women’s garlands and women
wear men’s garlands.

Fishermen plying curved boats watch
bright lights in the mansions with tall pillars.

People listen to songs, watch plays and enjoy
the white moon’s benefits, as they go to sleep
in the last phase of night.

Saturday, 16 May 2015

செம்பியன் - சிறுபாணாற்றுப்படை

நத்தத்தனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டது சிறுபாணாற்றுப்படை எனும் இந்நூல். இது 269 அடிகளாலமைந்தது. ஒய்மான் நாட்டு மன்னனான நல்லியக்கோடன் என்பவனைத் தலைவனாகக் கொண்டு எழுதப்பட்ட இந்நூல், அம்மன்னனிடம் பரிசு பெற்ற சிறுபாணன் ஒருவன் தான் வழியிற் கண்ட இன்னொரு பாணனை அவனிடம் வழிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

சோழநாட்டின் பெருமை
நறு நீர்ப் பொய்கை அடை கரை நிவந்த
துறு நீர்க் கடம்பின் துணை ஆர் கோதை
ஓவத்து அன்ன உண் துறை மருங்கில்
கோவத்து அன்ன கொங்கு சேர்பு உறைத்தலின் [68-71]
வருமுலை அன்ன வண்முகை உடைந்து
திருமுகம் அவிழ்ந்த தெய்வத் தாமரை
ஆசு இல் அங்கை அரக்குத் தோய்ந்தன்ன
சேயிதழ் பொதிந்த செம் பொற்கொட்டை
ஏம இன் துணை தழீஇ இறகு உளர்ந்து
காமரு தும்பி காமரம் செப்பும். (72-77)

தண் பணை தழீஇய தளரா இருக்கை
குணபுலம் காவலர் மருமான் ஒன்னார்
ஓங்கு எயில் கதவம் உருமுச்சுவல் சொறியும்
தூங்கு எயில் எறிந்த தொடி விளங்கு தடக்கை
நாடா நல்லிசை நற்றேர்ச் செம்பியன்

ஓடாப் புட்கை உறந்தையும் வறிதே அதாஅன்று (78-83)


குளிர்ச்சியான மருத நிலத்தைச் சார்ந்த சோர்வில்லாத (உழைப்பிலே ஈடுபட்டிருக்கும் மக்களைக் கொண்ட) ஊர்கள் விளங்கும் கிழக்குத் திசை நாட்டைக் காத்து வருபவன். சோழ மன்னர்களின் வழித்தோன்றல். இவன் நாட்டுக் குதிரைகள், பகைவர் நாட்டு உயர்ந்த மதிற்சுவரின் கதவுகளில், தனது கழுத்து மயிரை இடிமுழக்கம் போன்று தேய்க்கும். மன்னனோ பகைவர்களின் தூங்கு எயிலை அழித்த பெருமையினைப் பெற்ற சோழர் குலத்தில் தோன்றியவன். தொடி அணிந்த கைகளை உடையவன். இத்தகைய மன்னன் ஆட்சி செய்கின்ற சோழ நாட்டைவிட்டுக் குடிமக்கள் பெயராமல் மனஉறுதியோடு இருப்பதற்குக் காரணமான உறந்தை என்ற ஊரில் நீ பெறுகின்ற பரிசுப் பொருட்களும் குறைவானதாகவே இருக்கும் அது மட்டுமன்று.
(முன்னொரு காலத்தில் நல்லவர்களைத் துன்புறுத்தி வந்த அசுரர்களின் தொங்கும் மதிலைச் சோழ மன்னனொருவன் அழித்ததால், தூங்கெயில் எறிந்த பெருமையினைச் சோழர் குலம் பெற்றது என்பர்.  தூங்குஎயில் மூன்றெறிந்த சோழன் (சிலம்பு 5 ; 29) ஒன்னார் உட்கும் கடுந்திறல் தூங்கெயில் எறிந்த நின் ஊங்கணோர் (புறம் 39, 5-6) என்பன போன்ற இலக்கிய வரிகளாலும் இச்செய்தியினை அறியலாம்)

Friday, 8 May 2015

தமிழ் இலக்கியம்


சங்க இலக்கிய நூல்கள்

பதினெண்மேற்கணக்கு
எட்டுத்தொகை
நற்றிணைகுறுந்தொகை
ஐங்குறுநூறுபதிற்றுப்பத்து
பரிபாடல்கலித்தொகை
அகநானூறுபுறநானூறு

நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத் தொகை


பத்துப்பாட்டு
திருமுருகாற்றுப்படைபொருநராற்றுப்படை
சிறுபாணாற்றுப்படைபெரும்பாணாற்றுப்படை
முல்லைப்பாட்டுமதுரைக்காஞ்சி
நெடுநல்வாடைகுறிஞ்சிப்பாட்டு
பட்டினப்பாலைமலைபடுகடாம்


முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வள மதுரைக் காஞ்சி-மருவினிய
கோல நெடுநல் வாடை கோல்குறிஞ்சிப்பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து
என வரும் பழம்பாடல், பத்துப் பாடு நூல்கள்.



பதினெண்கீழ்க்கணக்கு
நாலடியார்நான்மணிக்கடிகை
இன்னா நாற்பதுஇனியவை நாற்பது
களவழி நாற்பதுகார் நாற்பது
ஐந்திணை ஐம்பதுதிணைமொழி ஐம்பது
ஐந்திணை எழுபதுதிணைமாலை நூற்றைம்பது
திருக்குறள்திரிகடுகம்
ஆசாரக்கோவைபழமொழி நானூறு
சிறுபஞ்சமூலம்முதுமொழிக்காஞ்சி
ஏலாதிகைந்நிலை

  • பழங்காலம்
  • இடைக்காலம்
  • இக்காலம்
  • பத்தொன்பதாம் நூற்றாண்டு
  • இருபதாம் நூற்றாண்டு
  • இருபத்தோராம் நூற்றாண்டு

புறத்திணை இயல்

வெட்சி நிரை கவர்தல்; மீட்டல் கரந்தையாம்
வட்கார் மேல் செல்வது வஞ்சி ; உட்காது
எதிர்ஊன்றல் காஞ்சி ; எயில்காத்தல் நொச்சி
அது வளைத்தல் ஆகும் உழிஞை - அதிரப்
பொருவது தும்பையாம் ; போர்க்களத்து மிக்கோர்
செரு வென்றது வாகையாம்

மனித வாழ்வின் உறுதிப்பொருள்களில் அறம், பொருள், வீடு என்ற மூன்றைப் பற்றிய செய்திகள் இங்கு கூறப்படுகின்றன. புறத்தார் யாவருக்கும் புலப்படும் ஒழுக்கத்தைப் பற்றி கூறுவதால் “புறப்பொருள்” எனப்பட்டது. இப்புற ஒழுக்கம் பத்து வகைப்படும் அவை முறையே வெட்சித் திணைகரந்தைத் திணைவஞ்சித் திணை,காஞ்சித் திணைஉழிஞைத் திணைநொச்சித் திணைதும்பைத் திணைவாகைத் திணைபாடாண் திணைபொதுவியல் திணைஎன்பனவாகும். சிலர் கைக்கிளை, பெருந்திணை என்ற இரண்டு அகப்பொருள் புறத்திணைகளையும் சேர்த்து எண்ணுவர்.

Thursday, 7 May 2015

வேந்தனின் உள்ளம்

பாடியவன்: சேரமான் கணைக்கா லிரும்பொறை
திணை: பொதுவியல் துறை; முதுமொழிக் காஞ்சி 'தாமே தாங்கிய
தாங்கரும் பையுள்' என்னும் துறைக்குக் காட்டுவர் இளம்பூரணர்

குழவி இறப்பினும், ஊன்தடி பிறப்பினும்,
ஆள் அன்று என்று வாளின் தப்பார்
தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்,
மதுகை இன்றி, வயிற்றுத் தீத் தணியத்,
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்ம ரோ, இவ் உலகத் தானே?

Monday, 20 April 2015

இந்திர விழா


 கதை அமைப்பு


 இந்திர விழா நடைபெறும் பொருட்டு வள்ளுவன் முரசறைந்து, புகார் நகருக்குச் செய்தி அறிவித்தான். இந்நிகழ்ச்சி, மக்களுக்கு விழாச் செய்தி தெரிவித்தல் என்னும் நிலையில் அமைந்துள்ளது.


3.3 இந்திர விழா


 நாவலந் தீவிலுள்ள மாந்தர் எல்லாம் பசி, பிணி, பகை முதலியவற்றால் துன்பம் அடையாது இருத்தல் பொருட்டுத் தெய்வத்தைக் கருதிச் செய்யும் சாந்திப் பெருவிழாவே இந்திர விழாவாகும். இவ்விழாவைத்  தீவகச் சாந்தி செய்தரு நன்னாள் என்று சாத்தனார் கூறுகின்றார்.


3.3.1 விழா வரலாறு


 பழம் பெருமையும் சிறப்பும் வாய்ந்தது புகார் நகரமாகும். ஒழுக்கங்களில் சிறந்து விளங்கிய மக்கள் பலரும் அந்நகரைப் போற்றுவர். பழஞ்சிறப்பு வாய்ந்த நகரின் புகழ் மேலும் சிறப்புற வேண்டும் என்று அருந்தவ முனிவர் அகத்தியர் நினைத்தார். அப்புகார் நகர் மேலும் வளமுடன் பொலிவடைய வேண்டுமானால் தேவர் தலைவனாகிய இந்திரனுக்கு இருபத்தெட்டு நாட்கள் விழா எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார். அப்போது புகார் நகரில் இருந்து ஆட்சி செய்த மன்னன் தூங்கு எயில்கள் எனப்படும் தொங்கும் கோட்டைகளை அழித்தவனாகிய தொடித்தோட் செம்பியன் ஆவான். அவனிடம் இக்கருத்தைத் தெரிவிக்க, உடனே இசைவு அளித்து, விழா சிறப்புடன் நடைபெற ஏற்பாடு செய்தான். செம்பியன் வேண்டுகோளை ஏற்று இவ்விழாவில் தேவர் தலைவனாகிய இந்திரனும், மற்றுமுள்ள தேவர்களும் விழாத் தொடங்கிய இருபத்தெட்டு நாட்களிலும் புகார் நகரத்திலே வந்து தங்கியிருந்தனர். கேள்வி ஞானம் உடைய சான்றோர்கள் இத்தகு உயர்வு மிக்க இந்த இந்திர விழாவினைக் கொண்டாடுதலை ஒரு போதும் தவறவிட மாட்டார்கள்.


காவிரிப் பூம்பட்டினத்திற்குப்  பூம்புகார் என்ற மற்றொரு பெயரும் உண்டு.  புகார் நகரம் இன்று பூம்புகார் என்னும் பெயரில் வழங்கப்படுகிறது.  விழாவறை காதைப் பகுதியால் இந்திர விழா தொடங்கிய முறையையும், சோழ மன்னனின் அருஞ் செயலும் ஆற்றலும் வியந்து போற்றப்படும் செய்தியையும் அறிந்து கொள்ள முடிகின்றது. இந்திர விழாவினை இருபத்தெட்டு நாட்கள் சிறப்பாகக் கொண்டாடும் மரபு இருந்துள்ளமையை உணர முடிகின்றது.


3.3.2 விழா நடத்த முடிவு செய்தல்


இந்திர விழாவினை நடத்த வேண்டும் என்பதற்காக அரசவையில் கூடியவர்கள்: இம்மை, மறுமைப் பயன்களை உணர்ந்தவரும் நால்வகை உறுதிப் பொருள்களின் உண்மை அறிந்த வரும் ஆன சமயக் கணக்கர், காலம் கணிக்கும் சோதிடர், தம் தேவ உருவினை மறைத்து மனித உருவம் கொண்ட கடவுளர்கள் (தேவர்கள்), பன்மொழி பேசும் வேற்று நாட்டினர், ஐம்பெருங் குழுவினர், எண் பேராயத்தினர் ஆகியோர் ஒன்று கூடி விழா நடத்த முடிவு செய்தனர்.


சமயக் கணக்கரும்;தந்துறை போகிய

 அமயக் கணக்கரும்; அகலா ராகிக்

 கரந்துரு எய்திய கடவுளாளரும்              (13-16)


(சமயக் கணக்கர் = சமயவாதிகள்: அமயக் கணக்கர் = காலம் கூறும் சோதிடர்; கரந்துரு எய்திய = உண்மை உருவத்தை மறைத்த.)


 ஐம்பெருங் குழு : அமைச்சர், புரோகிதர், சேனாதிபதியர், தூதுவர், சாரணர் ஆகிய ஐவரைக் கொண்ட குழு.


 எண்பேராயம் :கரணத்து இயலவர், கரும விதிகள், கனகச் சுற்றம், கடைக் காப்பாளர், நகர மாந்தர், நளிபடைத் தலைவர், யானை வீரர், இவுளி மறவர் எனப்படும் எண்மரைக் கொண்ட குழு.


 ஐம்பெருங் குழுவினரும், எண்பேராயத்தினரும் அரசனுக்குரிய பணிகளை நிறைவேற்றக் கூடியவர்கள்.


 காதையின் இப்பகுதி, பல்வேறுபட்ட மக்கள் கூடியிருத்தலைக் காட்டுகிறது. அக்காலத்தில் சமயப் பூசல் இல்லாமல் மக்கள் சமயப் பொறை (Religious Tolerance)  காத்தனர் என்பதனை இதனால் நன்கு உணர முடிகின்றது.


 பண்டைக் காலத்தில் ஊர்ப் பொதுக் காரியங்களை நகர் மக்களும் சான்றோரும், அரசனுடைய பணிகளைச் செய்யும் ஐம்பெருங் குழுவினரும், எண்பேராயத்தினரும், பலமொழி பேசுபவர்களும், ஒருங்கு குழுமியே எண்ணித் துணியும் வழக்கம் இருந்தமையை அறிய முடிகிறது. இச்செயல் அக்காலத்து நாகரிகச் சிறப்பிற்கு ஓர் எடுத்துக்காட்டாக உள்ளது.


3.3.3 விழாத் தொடக்கம்


 இவ்விழாவினை வழக்கம்போல் நடத்தாவிடில் புகார் நகருக்கும், மக்களுக்கும் துன்பம் வந்து சேரும். கொடி பறக்கும் தேரினையும், படைப் பெருக்கத்தினையும் கொண்ட கொற்றவனாகிய முசுகுந்த மன்னனுக்கு முன்னாள் ஏற்பட்ட துயரத்தினைப் போக்கியது இப்புகார் நகரத்து நாளங்காடி (பகல் நேரக் கடைத்தெரு)ப் பூதம். அப்பூதம் தனக்கு விழாவினை வழக்கம்போல் எடுக்காவிட்டால், சிவந்த வாயினை மடித்துத் தன் வலிமையான பற்கள் வெளித்தோன்ற, இடியின் முழக்கம் போன்று குரலெடுத்து முழக்கமிட்டு, மக்களுக்கும், புகார் நகருக்கும் துன்பத்தைச் செய்துவிடும் என்று சான்றோர்கள் கூறினர். மேலும், பாவிகளைப் பாசத்தால் (கயிற்றினால்) பிடித்து உண்ணும் சதுக்கப் பூதமும் இப்புகார் நகரை விட்டு நீங்கி விடும். ஆதலினால் இந்த மிகப்பெரிய உலகத்தில் உள்ள அரசர்கள் பலரும் ஒருங்கே வந்து கூடுகின்ற இந்திர விழாவுக்கான, கால்கோள் விழாவினைச் (தொடக்க விழா) செய்யுங்கள் என்றனர் சமய வாதிகள்.


மாயிரு ஞாலத்து அரசுதலை ஈண்டும்

 ஆயிரங் கண்ணோன் விழாக்கால் கொள்க

                                                     (அடிகள் 25-26)


(ஆயிரங்கண்ணோன் = இந்திரன்)


இப்பகுதியால் இந்திர விழாவை மறந்து கைவிடத் தகுந்த சூழ்நிலை அந்நகரத்தில் இருந்தமையை உணர முடிகிறது. புகார் நகரத்திற்கு ஏற்படும் துன்பத்தினைத் தடுக்கவும், நகரம் வளமடையவும், இந்திர விழாவை வழக்கம்போல் கொண்டாட வேண்டும் என்னும் செய்தி வெளிப்படுகின்றது. மேலும், உலகிலுள்ள அரசர்கள் முதலாக அனைவரும் வந்து கொண்டாடும் விழா என்பது உணர்த்தப்படுகிறது.


 வள்ளுவன் முரசு அறைந்து அறிவித்தல்


 வாளேந்திய வீரர்கள், தேர்ப் படையினர், குதிரைப் படையினர், யானைப் படையினர் ஆகிய நால்வகைப் படையினரும் சூழ்ந்து வந்து கொண்டிருக்க, முதுகுடிப் பிறந்த வள்ளுவன் (முரசறைவோன்) வச்சிரக் கோட்டத்தில் உள்ள முரசினை யானையின் கழுத்திலே ஏற்றி, குறுந்தடி கொண்டு முரசறைந்து, இந்திர விழா நடைபெற இருப்பதனைப் புகார் நகர மக்களுக்குப் பின்வரும் செய்திகளைக் கூறி அறிவித்தான்.


 முதலில் திருமகள் விரும்பி உறைகின்ற மூதூரான இப்புகார் நகரம் வாழ்க என்று வாழ்த்தினான். பின் மாதந்தோறும் மூன்று முறை தவறாது மழை பொழிவதாகுக என்றான். ஞாயிறு, திங்கள் முதலிய கோள்கள் தம்நிலையில் மாறுபடா வண்ணம் மன்னவன் செங்கோலனாக ஆகுக என்று அரசனை வாழ்த்தி முரசறைந்து தெரிவித்தான்.


 திருவிழை மூதூர் வாழ்கஎன் றேத்தி

 வானமும் மாரி பொழிக! மன்னவன்

 கோள்நிலை திரியாக் கோலோன் ஆகுக.   (32-34)


 (திரு = திருமகள்; விழை = விரும்பும்; மூதூர் = பழைமை வாய்ந்த புகார் நகரம்; கோள்நிலை = ஞாயிறு, திங்கள் முதலான கோள்கள்.)


 இப்பகுதியால் முரசறைவோர் நகரத்தையும், மழையையும், செங்கோலையும் முதலில் வாழ்த்திப் பின்னரே செய்தி அறிவிப்பது மரபு என்னும் செய்தி உணர்த்தப்படுகின்றது.


3.3.4 விழாவின் மாண்புரைத்தல்


தீவகச் சாந்தி விழா கொண்டாடப்படும் நன்மையுடைய நாட்களிலே ஆயிரம் கண்களை உடைய இந்திரன் தலைமையாக வீற்றிருப்பான். அவ்விடத்திலே வசுக்கள் எண்மர், ஆதித்தர் பன்னிருவர், உருத்திரர் பதினொருவர், மருத்துவர் இருவர் ஆகிய முப்பத்து மூவர் எனப்படும் நால்வகைத் தேவர்களும், பல பிரிவினரான தேவ கணத்தினர் பதினெண்மரும் உடனிருந்து விழாவினைச் சிறப்புச் செய்வர்.


 மன்னன்  கரிகால் வளவன், பகைவரை வெல்லக் கருதி, வடதிசை நோக்கிப் போயினான். அந்நாளிலே இப்புகார் நகரம் வெறுமையாகிப் பொலிவிழந்து போயிற்று. அதுபோலத் தேவர் கோமானின் பொன்னகரமான அமராபதியும் இந்திர விழா நாளில் வறிதாகிப் போகும் தன்மையில் தேவர்கள் இப்புகார் நகருக்கு வந்து விடுவர். இவ்விழாவினைக் குறித்துப் பழைய நிலையினை உணர்ந்த சான்றோர்கள் முடிவாகக் கூறிய, பொருள் பொதிந்த சொற்கள் இவையே ஆகும்.


 மன்னன் கரிகால் வளவன் நீங்கியநாள்

 இந்நகர் போல்வதோர் இயல்பினது ஆகிப்

 பொன்னகர் வறிதாப் போதுவர் என்பது

 தொன்னிலை உணர்ந்தோர் துணிபொருள்    (35-42)


 (பொன்னகர் = அமராபதி; வறிதாக = வெற்றிடமாக; தொன்னிலை = பழமையான வரலாறு)


 இப்பகுதியில் இந்திர விழா நடக்கும் நாளில் தேவர்கள் எல்லாரும் வந்து புகாரில் தங்குவதால், அமராபதியே வெற்றிடம் ஆகிவிடும் என்று கூறுவதால் விழாவின் மேன்மை புலப்படுகின்றது.


3.3.5 மக்களின் ஈடுபாடு



வள்ளுவன் முரசறைந்து வாழ்த்திய பிறகு, மக்களுக்கு, நகரை அழகுபடுத்தும் விதம் பற்றிக் கூறினான். கொடிகள் விளங்கும் வீதிகளிலும், குற்றமற்ற கோயில் வாயில்களிலும் பூரணக் கும்பங்களும், பொற்பாலிகைகளும், பாவை விளக்குகளும் மற்றும் பல வகையான மங்கலப் பொருள்களுடனே பரப்புங்கள்; வாழை, கரும்பு, கமுகு, வஞ்சிக்கொடி, பூங்கொடி ஆகியவற்றைக் கட்ட வேண்டிய இடங்களில் கட்டுங்கள்; விழாக் கோலம் நிறைந்த வீதிகளிலும், மன்றங்களிலும் பழைய மணலை மாற்றிப் புதுமணலைப் பரப்புங்கள்; சிறுசிறு கொம்புகளில் கட்டும் கொடி முதலானவற்றை மாடங்களிலும் வாயில்களிலும் கட்டுங்கள்; மேலும் நெற்றிக் கண்ணுடைய சிவபெருமான் முதலாக இந்நகருக்குள்ளே (புகார் நகரம்) வாழும் சதுக்கத் தெய்வமான சதுக்கப் பூதம் ஈறாக உள்ள கோயில்களில் எல்லாம் செய்ய வேண்டிய வழிபாட்டு முறைகளை முறைப்படி செய்யுங்கள் என்று மக்களுக்கு விரிவாகக் கூறி முரசறைந்தான்.


 விழவுமலி மூதூர் வீதியும், மன்றமும்

 பழமணல் மாற்றுமின்; புதுமணல் பரப்புமின்;

 நுதல்விழி நாட்டத்து இறையோன் முதலாப்

 பதிவாழ் சதுக்கத்துத் தெய்வம் ஈறாக

 வேறுவேறு சிறப்பின் வேறுவேறு செய்வினை

 ஆறறி மரபின் அறிந்தோர் செய்யுமின்        (54-57)


 (நுதல்விழி = நெற்றிக்கண்;  சதுக்கத்துத் தெய்வம் = சதுக்கப் பூதம்)


இப்பகுதியால் மக்கள், வீதிகள், பொது இடங்கள், கோயில்கள் முதலான இடங்களில் அழகுபடுத்திய விதம் பற்றிய செய்தியினை அறிந்து கொள்ள முடிகிறது.


இப்பகுதி இந்திரனுக்கு விழா எடுக்கும் நாட்களில், அந்நகரத்து உறைகின்ற எல்லாத் தெய்வங்களுக்கும் விழா நிகழ்த்தப்படும் வழக்கம் மரபாய் இருந்தமையை உணர்த்துகின்றது.


 பட்டி மண்டபம் ஏறுமின்


குளிர்ந்த மணல் பரப்பிய பந்தல்களிலும் நிழல் தரும் மரங்களின் கீழ் அமைந்துள்ள ஊர்ப் பொதுவிடங்களிலும், புண்ணிய நல்லுரைகள் அறிந்தவர்கள் உரையாற்றுங்கள்; தத்தம் சமயத்தில் பொதிந்த தத்துவங்கள் சிறந்தவை என்றால், பட்டி மண்டபத்து ஏறி வாதிட்டுப் பயன் காணுங்கள்; பகை மக்களோடும் பகையும், கோபமும் கொள்ளாமல் அவரை விட்டு அகன்று செல்லுங்கள்; வெண்மணற் குன்றுகள், பூஞ்சோலைகள், நீர்த்துறை ஆகிய இடங்களில் தேவர்களும் மக்களும் சமமாக உலவிக் கொண்டு இருங்கள்; இவை அனைத்தையும் இந்திர விழா நடக்கும் இருபத்தெட்டு நாட்களிலும் எங்கும் எல்லா இடங்களிலும் பின்பற்றுங்கள். இவ்வாறு செய்தி வள்ளுவன் முரசறைந்து மக்களுக்குத் தெரிவித்தான்.


 ஒட்டிய சமயத்து உறுபொருள் வாதிகள்

 பட்டிமண் டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்;

 பற்றா மாக்கள் தம்முடன் ஆயினும்

 செற்றமும் கலாமுஞ் செய்யாது அகலுமின்;            (60-63)


(பற்றா மாக்கள் = பகைவர்; செற்றம் = தீராத சினம்;  கலாம் = கலகம் - போர், சண்டை)


இப்பகுதியில், விழா நாட்களில் செய்ய வேண்டியன இவை, செய்ய வேண்டாதன இவை என்று வகைப்படுத்திச் சாத்தனார் கூறியுள்ளார்.


 வாழ்த்துக் கூறுதல்


பசியும், பிணியும், பகையும் நீங்கி மழையும் வளமும் எங்கும் சுரக்கட்டும் என முடிவில் வாழ்த்தினான். இவ்வாறெல்லாம் புகார் நகரில் உள்ள பட்டினப் பாக்கத்துப் பகுதிகள் அனைத்திலும் விழா அணி பற்றிய செய்தியினை வள்ளுவன் முரசறைந்து தெரிவித்தான்.


 பசியும் பிணியும் பகையும் நீங்கி

 வசியும் வளனும் சுரக்க!என வாழ்த்தி

 அணிவிழா அறைந்தனன் அகநகர் மருங்கென்         (70-72)


 (வசி = மழை.)


 இப்பகுதியின் வாயிலாக, முரசறையும் செய்தி வள்ளுவன், தொடக்கத்திலும் முடிவிலும் நாடு, அரசன், மக்கள் முதலியோரை வாழ்த்துதல் மரபு என்ற செய்தியினை அறிய முடிகிறது


3.4 தொகுப்புரை


 தமிழ் இலக்கியங்களில் இரட்டைக் காப்பியங்களுள் ஒன்றாகத் திகழ்வது  மணிமேகலை. இக்காப்பியத்தின் முதல் காதையாகிய விழாவறை காதை என்னும் இப்பாடப் பகுதியில் பூம்புகார் நகரில் தொன்று தொட்டு நடத்தப்பட்டு வரும் இந்திர விழாவின் சிறப்புப் பேசப்படுகிறது.


 இப்பகுதி மூலம் இந்திரவிழா நடத்தப்பட்டதையும் நடத்தப்பட்ட முறையினையும் நாம் உணர முடிகிறது; விழா நாட்களில் நகரை அழகுபடுத்திய விதம் பற்றிய கருத்துகளை அறிய முடிகிறது.


இந்திர விழா நடப்பதைத் தெரிவிக்கும் வள்ளுவன் முதலிலும், முடிவிலும் ஊர், மழை, அரசன் முதலானோரை வாழ்த்துவது மரபு என்னும் செய்தி உணர்த்தப்படுகிறது.


விழா நாட்களில் மக்கள் பிறருடன் பகையும், கோபமும் கொள்ளக் கூடாது என்னும் பண்பு உணர்த்தப்படுகிறது. நாட்டில் பசி, பிணி, பகை முதலியன நீங்கி மழையும் வளமும் பெருக வேண்டும் என்று வள்ளுவன் இறுதியாக வாழ்த்தினான் என்பதும் கூறப்படுகிறது.