Friday, 14 March 2014

கற்றல் நன்றே! ---- பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்

நெடுஞ்செழியன் பாண்டிய நாட்டினை ஆட்சி செய்து வந்த பாண்டிய மன்னனாவான். வட நாட்டு ஆரிய மன்னர்களைப் போரில் வென்றதனால் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்ற சிறப்புப்பெயரைப் பெற்றான் இப்பாண்டிய மன்னன். பெரும்படை மிக்கவனாகத் திகழ்ந்த இவன் தென்னாட்டு அரசர்கள் பலரை அடக்கி சேர,சோழர்கள் பலரையும் வென்றவனும் ஆவான். சேரன்செங்குட்டுவன் காலத்தில் வாழ்ந்த இவன் அம்மன்னனுக்கு முன்னரே வடநாட்டில் ஆரிய அரசர்களைஅடக்கி ஆண்டவனுமாவான். கொங்கு குறுநில மன்னர்கள் பலரை வென்ற பெருமையினையும் உடையவனாவான். அறம் (நீதி) தவறியதால் தன்னுயிரை மாய்த்த இம்மன்னன் கல்விச்சிறப்பினை முதன் முதலில் உலகினுள் உணர்த்திய மன்னன் என்ற பெருமையினைக் கொண்டவன். இவனது புறப்பாடலில் இவன் கல்வியின் சிறப்புகளைக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

"உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே!
பிறப்போரன்ன உடன்வயிற்றுள்ளும்
சிறப்பின் பாலால் தாயும் மனம் திரியும்
ஒரு குடிப் பிறந்த பல்லோருள்ளும்
முத்தோன் வருக என்னாது அவருள்
அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்
வேற்றுமை தெரிந்த நாற்பா லூள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேல் பால் ஒருவனும் அவன் கண்படுமே"
                                    ----பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்

தன் ஆசிரியர்க்கு ஒரு துன்பம் வந்த காலத்தில் அதைத் தீர்க்க உதவி செய்தல், மிகுந்த பொருளைக் கொடுத்தல், வழிபடும் நிலையிலிருந்து மாறாமல் கற்றல் ஆகிய நற்செயல்கள் அனைத்தையும் கடைப்பிடித்து ஒருவன் கல்வியைப் பெற்றுக் கொள்ள வெண்டும். ஏனெனில், தாய் ஒருத்தி தன் வயிற்றில் வேறுபாடில்லாமல் பிறந்த பல பிள்ளைகளில் கல்விச் சிறப்புடைய காரணத்தால் ஒன்றை நோக்கி மனம் வேறுபடக் கூடும். ஒரு குடியில் பிறந்த பலருள்ளே மூத்தோனை வருக என்று அழையாமல், அவர்களுக்குள்ளே அறிவுடையோன் சென்ற வழியில் அரசனும் செல்வான். வேறுபாடு சொல்லப்படும் நான்கு குலங்களுக்குள்ளும், கீழ்க்குலத்தான் எனப்படுபவன் ஒருவன் கல்வி கற்றுச் சிறந்திருந்தால், மேற்குலத்தான் எனப்படுபவனும் அவனிடம் சென்று வழிபடுவான்.”

அறம் (நீதியைக்) காக்க உயிர் நீத்த வரலாறு

கோவலனைச் செய்யாத குற்றத்திற்காக கொலை செய்ய ஆணையிட்ட (உத்தரவிட்ட) நெடுஞ்செழியன், கண்ணகி சொல்லக் கேட்டு தான் அறம் வழுவியதை (நீதி தவறியதை) உணர்ந்து மனம் நொந்து "யானோ அரசன்! யானே கள்வன்! தென்புலங்காவல் என் முதல் பிழைத்தது" எனத் தனதுயிரை விட்டான். வளைந்த செங்கோலை தன் உயிர் கொடுத்து நிமிர்த்தினான். இவன் மனைவிகோப்பெருந்தேவியும் தன் கணவன் இறந்த மறுகணமே உயிர் நீத்தாள். நீதி தவறியதால் தம் உயிர் நீத்த நெடுஞ்செழியன் அவன் மனைவி கோப்பெருந்தேவி இருவரும் உலக வரலாற்றில் இடம்பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இப்பாண்டிய மன்னன் செயலை நினைத்து வியந்த சேரன்செங்குட்டுவன் "பாண்டியன் செங்கோல் திறங்காக்க உயிர்விட்டானே! அரசர்களுக்கு, மழை வளம் கரப்பின் வான் பேரச்சம், பிழை உயிர் எய்தில் பெரும் பேரச்சம். கொடுங்கோலுக்கு அஞ்சி வாழ்தல் துன்பம். துன்பம் அல்லது தொழுதகவு இல்லை!" என மனம் வருந்தினான் செங்குட்டுவன் என்பது வரலாறு.

No comments:

Post a Comment